/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சளி, காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்படும் மக்கள் குடிநீர் தரம் இல்லை என புகார்
/
சளி, காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்படும் மக்கள் குடிநீர் தரம் இல்லை என புகார்
சளி, காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்படும் மக்கள் குடிநீர் தரம் இல்லை என புகார்
சளி, காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்படும் மக்கள் குடிநீர் தரம் இல்லை என புகார்
ADDED : மார் 18, 2024 12:06 AM
அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் குடிநீர் பாதிப்பால் சளி, காய்ச்சலுக்கு, உள்ளாகியுள்ளனர்.
அன்னுார் வட்டாரத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்னுார் அவிநாசி மோப்பிரிபாளையம் ஆகிய மூன்று பேரூராட்சிகள், சூலூர் விமானப்படை தளம் குடியிருப்பு பகுதி ஆகியவற்றுக்கு 241 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்காக சிறுமுகை அருகே பாறைதுறை என்னும் இடத்தில் பவானி ஆற்றில் நீர் எடுக்கப்பட்டு சுமைதாங்கி என்னும் இடத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு, அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் மற்றும் சூலூர் அனுப்பப்படுகிறது.
இந்த கூட்டு குடிநீர் திட்டத்தில் சப்ளையாகும் நீர் தரம் குறைவாக உள்ளது. இரண்டு நாட்களில் புழுக்கள் உருவாகி விடுகிறது என கடும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது :
இங்கு சப்ளை ஆகும் நீர் மிகவும் தரம் குறைவாக உள்ளது. தண்ணீரை குடிக்கும் போது தொண்டையில் பாதிப்பு ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் சில மாதங்களாக, சளி, தொண்டை வலி, காய்ச்சல் ஆகிய பாதிப்புக்கு உள்ளாகினர்.
அன்னுார் மற்றும் கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்து உள்ளோம்.
தனிப்பட்ட முறையில், சமூக ஆர்வலர்கள், மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே பத்ரகாளி அம்மன் கோவில் அருகே நீர் சேகரித்து அந்த நீரை குடிநீர் பரிசோதனை நிலையத்தில் பரிசோதித்த போது தரமானதாக உள்ளது.
ஆனால் அன்னுார் பகுதியில் பேரூராட்சியால் வழங்கப்படும் நீர் தரம் குறைவாக உள்ளது பரிசோதனையில் தெரிய வந்தது. பல நூறு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், 'குடிநீர் சேகரிக்கப்பட்டு கோவையில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை.
எனினும் பொதுமக்கள் தெரிவித்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளோம், என்றார்

