/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுன்சிலர்களிடம் மக்கள் வார்டு கூட்டத்தில் சரமாரி கேள்வி!
/
கவுன்சிலர்களிடம் மக்கள் வார்டு கூட்டத்தில் சரமாரி கேள்வி!
கவுன்சிலர்களிடம் மக்கள் வார்டு கூட்டத்தில் சரமாரி கேள்வி!
கவுன்சிலர்களிடம் மக்கள் வார்டு கூட்டத்தில் சரமாரி கேள்வி!
UPDATED : அக் 28, 2025 01:30 AM
ADDED : அக் 27, 2025 10:20 PM

கோவை:கோவை மாநகராட்சியில் நடந்த வார்டுகளுக்கான சிறப்பு கூட்டத்தில், தங்கள் பிரச்னைகள் குறித்து புகார் செய்தும், நடவடிக்கை எடுக்காதது ஏன் என, பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பதிலளிக்க முடியாமல் கவுன்சிலர்கள் திணறினர்.
கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன. முதல் கட்டமாக, நேற்று 38 வார்டுகளில், அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது. 100வது வார்டில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மக்களிடம் மனுக்களை நேரடியாக பெற்றார். 29வது வார்டில் மேயர் ரங்கநாயகி பங்கேற்றார்.
அடுக்கடுக்காக புகார்கள் மழைநீர் வடிகால் இல்லாமல் ரோடு போடப்பட்டுள்ளது, ஒழுங்காக குப்பை எடுப்பதில்லை. ரோடு சரியில்லை; மழை பெய்தால் சேறும் சகதியுமாகி விடுகிறது, சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் இருக்கிறது, தெருவிளக்குகள் இல்லை என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தெற்கு மண்டலம், 77வது வார்டில் நடந்த கூட்டத்தில், அதிகாரிகள் மீது பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
குழந்தையே பிறந்து விட்டது ஒரு பெண், தன்னுடைய இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு பேசியபோது, 'கர்ப்பிணியாக இருக்கும்போது, ஆபத்தாக உள்ள ஒரு மரத்தை வெட்ட சொன்னேன்.
குழந்தை பிறந்து மூன்றாண்டுகளாகி விட்டது; இன்று வரை நடவடிக்கை இல்லை' என, நேருக்கு நேராக குற்றம் சாட்டினார்.
கவுன்சிலர் ராஜலட்சுமி குறுக்கிட்டு, ''நானே நேரில் வி.ஏ.ஓ. ஆர்.ஐ. உட்பட அனைத்து அதிகாரிகளையும் அழைத்துச் சென்று, அந்த மரத்தை அகற்ற முயற்சித்தோம். அது பெரிய மரமாக இருக்கிறது.
''நீங்கள் என்னை எதுவும் சொல்லக்கூடாது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.
விடாப்பிடியாக அப்பெண், 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, நீங்கள் தானே முயற்சி செய்ய வேண்டும்' என்றார்.
இவ்வாறு, பொதுமக்கள் தரப்பில் அடிப்படை வசதிகள் கோரி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதை சற்றும் எதிர்பாராத கவுன்சிலர்கள், பதிலளிக்க முடியாமல் திணறினர்.

