/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றுப்பாலத்தை புதுப்பிக்கணும்; மக்கள் எதிர்பார்ப்பு
/
ஆற்றுப்பாலத்தை புதுப்பிக்கணும்; மக்கள் எதிர்பார்ப்பு
ஆற்றுப்பாலத்தை புதுப்பிக்கணும்; மக்கள் எதிர்பார்ப்பு
ஆற்றுப்பாலத்தை புதுப்பிக்கணும்; மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 28, 2025 04:00 AM
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தின், உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து, தடுப்பு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் உள்ளது. திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பாலத்தில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன.
இந்த பாலம் 1986ல், 12 தூண்களுடன் 152 மீ., நீளம், 10 மீ., அகலத்துடன் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்ட போது, எதிர்பார்க்கப்பட்ட வாகன போக்குவரத்தையும் தாண்டி, வாகனங்கள் தற்போது அவ்வழியாக சென்று வருகின்றன.
பயன்பாட்டுக்கு வந்து, 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து, ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் பாலத்தை கடக்கும் போது, பாலத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன.
பாலத்தின் தடுப்பு சுவர்கள் பல இடங்களில் உடைந்துள்ளன. ரோட்டில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன.
நடைபாதையில் உள்ள சிமென்ட் தளங்கள் பெயர்ந்து போயுள்ளன; தடுப்பு சுவரை ஒட்டி செடிகள் முளைத்துள்ளன. மேலும், பாலத்தின் இரு நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்ட தடுப்புகள் சரிந்து, புதருக்குள் மறைந்துள்ளது.
இதனால், இரவு நேரத்தில், வாகன ஓட்டுநர்கள் தடுமாற வேண்டியுள்ளது. போதிய எச்சரிக்கை பலகைகளும் இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.