/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் பிரச்னைகளுக்கு கிடைத்தது தீர்வு
/
மக்கள் பிரச்னைகளுக்கு கிடைத்தது தீர்வு
ADDED : அக் 26, 2025 11:09 PM

தேர்தல் நெருங்கிவிட்டாலே, அரசு அதிகாரிகளிடம் தடபுட லாக வேலை வாங்கும் அரசியல்வாதிகள், கடந்த நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் என்ன செய்தார்கள் என்பதுதான், நம்பி வாக்களித்த மக்களின் கேள்வியாக உள்ளது.
இதற்கு விடை காண, வார்டுகளுக்கு 'விசிட்' செய்து, மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை திங்கள்தோறும் படங்களுடன் பிரசுரித்து வருகிறோம். பொது மக்கள் பேட்டியுடன், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.
அரசு தரப்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குப்பை தேக்கம், ரோடு சார்ந்த பிரச்னைகளுக்கு, பெருமளவில் தீர்வு காணப்பட்டுள்ளது.
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு! வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 15வது வார்டில் மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்., மில்ஸ் பகுதியில், கணேஷ் நகர், காந்தி நகர், பாலசுப்ரமணியம் நகர், விவேக் நகர், கே.கே., நகர், கிரீன் சிட்டி, என்.பி.சி., நகர், அன்னை வில்லா, அன்னை கார்டன் எக்ஸ்டன்சன், கணபதி கார்டன் என அனைத்து இடங்களுக்கும் சென்றோம். மக்கள் முன்வைத்த பிரதான பிரச்னை, மழை காலத்தில் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதும், குப்பை தேக்கமும்தான். நமது செய்திக்கு பிறகு, இப்பிரச்னை ஓரளவு சரியாகியுள்ளது.
மயானம் பராமரிப்பு கிழக்கு மண்டலம், 60வது வார்டு உப்பிலிபாளையத்தில் இருக்கும் ஒரே மயானம், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதர்மண்டி கிடந்தது. மக்கள் உள்ளே செல்லமுடியாமல் சிரமப்பட்ட நிலையில், நமது செய்திக்கு பிறகு, தற்போது புதர் அகற்றப்பட்டு மயானம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
துார்வாரப்பட்டது உப்பிலிபாளையம் பகுதியை கடந்து செல்லும் சங்கனுார் கால்வாயின் கரையில் செடி, கொடிகள் வளர்ந்து, தண்ணீர் செல்ல தடையாக இருந்தது. மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததால், அருகே குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் இருந்தனர். நமது செய்திக்குப் பின், அந்த கால்வாய் துார்வாரப்பட்டுள்ளது. இருப்பினும், அடிக்கடி துார்வார வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பைக்கு 'குட் பை' மந்தைகருப்பன் கோயில் பின்புறம், இரவு நேரங்களில் குப்பை தொடர்ந்து கொட்டப்படுவது சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுத்தது. அருகே செல்லும் சாக்கடையில் அடைப்பையும் ஏற்படுத்தியது. நமது செய்திக்கு பிறகு, தற்போது, அங்கு குப்பை அகற்றப்பட்டு, 'சிசிடிவி' வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ரோடு போட்டாச்சு! 56வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மறைந்த பிறகு, அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக வார்டு மக்கள் குமுறினர். காமாட்சி நகர் எக்ஸ்டன்சன் பகுதியில் மழை காலத்தில் ரோடுகளில் தண்ணீர் தேங்குவதால், தீவுத்திடலுக்குள் வாழ்வது போன்று உணர்வதாக, அப்பகுதி மக்கள் புலம்பினர். நமது செய்திக்கு பிறகு, அங்கு ரோடு போடப்பட்டுள்ளது.
ரோடு போட்டு விமோசனம் வடக்கு மண்டலம், 18வது வார்டு கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம், சரஸ்வதி நகரில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில், நமது செய்திக்கு பிறகு, தற்போது ரோடு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு வேலி சரஸ்வதி நகர் வளைவில் கிணறு ஒன்று உள்ளது. இக்கிணற்றை சுற்றி பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி, சரிந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. இந்த வழித்தடத்தில் சைக்கிளில் குழந்தைகள் பயணிக்கின்றனர். விபத்துகள் நடக்கும் முன் மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் சார்பில், நமது நாளிதழில் செய்தி வெளியானவுடன், சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சூர்யா நகருக்கு
எப்போது விடிவு?
கிழக்கு மண்டலம், 56வது வார்டில் சூர்யா நகர் செல்வதற்கு, அங்குள்ள ரயில்வே கேட்டை(கடவு எண்:3) மக்கள் கடந்து செல்கின்றனர். இங்கு மேம்பாலம் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின், 15 ஆண்டுகால போராட்டம். இன்றும் தொடர்கிறது. ரயில்வே துறை சம்பந்தப்பட்ட, இதுபோன்ற பிரச்னைகளுக்கும், விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது, நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு!

