/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுசிகா நதியில் கழிவுகளை கொட்ட நிரந்தர தடை:கம்பிவேலி அமைத்தது கூடலூர் நகராட்சி
/
கவுசிகா நதியில் கழிவுகளை கொட்ட நிரந்தர தடை:கம்பிவேலி அமைத்தது கூடலூர் நகராட்சி
கவுசிகா நதியில் கழிவுகளை கொட்ட நிரந்தர தடை:கம்பிவேலி அமைத்தது கூடலூர் நகராட்சி
கவுசிகா நதியில் கழிவுகளை கொட்ட நிரந்தர தடை:கம்பிவேலி அமைத்தது கூடலூர் நகராட்சி
ADDED : மார் 18, 2024 10:55 PM

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே கவுசிகா நதியில், கழிவுகளை கொட்டுவதை தடுக்க, கூடலூர் நகராட்சி நிர்வாகம் கம்பி வேலி அமைத்துள்ளது.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ராவுத்துக்கொல்லனூர் மலை கிராமத்தில் இருந்து சுமார், 2 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை, குருடி மலையில் கவுசிகா நதி உற்பத்தி ஆகிறது. இந்நதி இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம், வாகராயம்பாளையம், தெக்கலூர், சென்று திருப்பூர் மாவட்டம் சுல்தான் பேட்டை அருகில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீளம், 52 கி.மீ., பழமையான இந்நதி இன்று ஆக்கிரமிப்புகளால் சிதைந்து, சின்னாபின்னமாகி உள்ளது.
இறைச்சி கழிவுகள்
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராவுத்துக்கொல்லனூர், பூச்சியூர், தெற்குப்பாளையம், வழியாக கோவை மேட்டுப்பாளையம் ரோட்டை பால விநாயகா நகர் அருகே இந்நதி கடக்கிறது. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் இப்பகுதி கவுசிகா நதியை சமூக விரோத கும்பல், குப்பை தொட்டியாக பயன்படுத்தி வருகிறது.
கவுண்டம்பாளையம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழி கழிவுகள், குப்பை, மருத்துவ கழிவுகளை இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்து மூட்டை, மூட்டையாக கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இப்பகுதியில் இறைச்சிக் கழிவுகள், கட்டடக்கழிவுகள் உள்ளிட்டவைகளை கொட்டக் கூடாது. மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, கூடலூர் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்தது. ஆனால், அந்த அறிவிப்புக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை.
கம்பி வேலி
பகல் நேரத்தில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் வாகனங்களை பிடித்து, அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை அறிந்த கும்பல் நள்ளிரவு நேரங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விடுகின்றன.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடிவு செய்த கூடலூர் நகராட்சி நிர்வாகம், இப்பகுதியில் உள்ள கவுசிகா நதி பாலத்தை ஒட்டியுள்ள பகுதியில், 20 அடி உயரத்துக்கு கம்பி வேலி அமைத்துள்ளது. கவுசிகா நதியின் தென்பகுதியில் இருந்து, வட பகுதி வரை நீளமாக கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கழிவுகளை கவுசிகா நதியில் வீச முடியாது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் கோழி கழிவுகளை கொட்டி விட்டு செல்வதால், வனப்பகுதியில் இருந்து இந்நதியின் வழியாக கூட்டம், கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள், கழிவுகளை தின்றுவிட்டு, இரண்டு சக்கர வாகனங்களில் மேட்டுப்பாளையம் ரோட்டை கடந்து செல்லும் நபர்களை துரத்துகின்றன. இதனால் பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். தற்போது கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

