ADDED : நவ 24, 2024 11:10 PM
வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், தற்போது, 60 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்வதாலும், உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்காகவும், கூடுதலாக 50 ஆட்டோக்கள் இயக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், 110 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை கலெக்டரின் உத்தரவின் பேரில், வால்பாறை மலைப்பகுதியில் கூடுதலாக, 50 பயணியர் ஆட்டோகள் இயக்க விரைவில் 'பர்மிட்' வழங்கப்படும். எனவே, விருப்பம் உள்ள நபர்கள் ஆட்டோ இயக்க அனுமதி பெறுவதற்கு, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களுக்கு சீனியார்ட்டி முறைப்படி புதிதாக ஆட்டோ 'பர்மிட்' வழங்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.