/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பு
/
தேயிலை செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பு
ADDED : நவ 10, 2025 11:48 PM

வால்பாறை: பருவமழைக்கு பின் தேயிலை உற்பத்தி அதிகரிக்க, பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில் மொத்தம், 32,825 ஹெக்டேரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் தேயிலை மட்டும், 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
வால்பாறையில் தென்மேற்குப் பருவமழைக்கு பின், வடகிழக்குப் பருவமழை சாரல்மழையாக பெய்கிறது. வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரங்களில் இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு உற்பத்தி அதிகரிக்க துவங்கியுள்ளது.
மேலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை செடிகள் பல்வேறு பூச்சிகளினால் துளிர்விட முடியாத நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் தேயிலை செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி எஸ்டேட் பகுதியில் தீவிரமாக நடக்கிறது.
இது குறித்து, தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் பருவமழைக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன. இந்நிலையில், தேயிலை செடிகளை தாக்கும் நோயிலிருந்து செடிகளை பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
இதன் வாயிலாக தேயிலை உற்பத்தி அதிகரிப்பதோடு, தரமான தேயிலை துாளும் தயாரிக்க முடியும்,' என்றனர்.

