ADDED : பிப் 10, 2025 06:27 AM

காமதேனு திருக்கயிலாய மலையில் பல ஆண்டுகளாக தவம் மேற்கொண்டது. ஆனாலும் ஈசனின் தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது அங்கே வந்த நாரதர் தான் வழிபாடு செய்த தட்சிண கைலாயம் பற்றி காமதேனுவிடம் கூறினார்.
அத்தலத்தின் சிறப்பினைக்கேட்ட காமதேனு தன் கன்றுடன் வந்து அன்றாடம் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டது.
காமதேனுவின் கன்றான பட்டி, விளையாட்டாக சிவலிங்கத்தை மூடியிருந்த புற்றை மிதித்துவிட்டது, கன்றின் கால்கள் புற்றினுள் மாட்டிக்கொண்டது.
காமதேனு கன்றின் கால்களை விடுவிக்க தனது கொம்பால் புற்றை கலைத்தது. கன்றின் கால்பட்ட இடத்திலிருந்தும் கொம்பு பட்ட இடத்திலிருந்தும் ரத்தம் பொங்கியது. அதை கண்ட காமதேனு மிகுந்த வருத்தமடைந்தது.
காமதேனுவின் வருத்தத்தை போக்குவதற்காக நேரில் தோன்றிய சிவபெருமான் சிவசக்தியின் வளைத்தழும்பை என் மார்பில் ஏற்றது போல உனது கன்றின் குளம்படி தழும்பையும் நான் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
நெடுங்காலம் என்னை நினைத்துதவம் இருந்ததால் இத்தலம் இனி காமதேனுபுரம் என்றும், உன் கன்றின் நினைவாக பட்டிபுரி என்றும் அழைக்கப்படும் என்றார். இத்தலத்தின் வரலாற்றை மெய்பிக்கும் வகையில் கருவறையில் அருள்பாலிக்கும் பட்டீஸ்வர சுவாமியின் மேல் குளம்படி சுவட்டையும், கொம்புத்தழும்பையும் இன்றும் பக்தர்கள் தரிசனத்தின் போது காணமுடிகிறது.

