/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூவோடு வைக்கும் இடத்தில் கழிவு மண் அப்புறப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தல்
/
பூவோடு வைக்கும் இடத்தில் கழிவு மண் அப்புறப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தல்
பூவோடு வைக்கும் இடத்தில் கழிவு மண் அப்புறப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தல்
பூவோடு வைக்கும் இடத்தில் கழிவு மண் அப்புறப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 07, 2025 08:35 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்க உள்ள நிலையில், தெப்பக்குளம் அருகே கழிவு மண் குவிந்து கிடப்பதை அகற்ற வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூவோடு எடுத்து வழிபாடு; மூன்று நாட்கள் தேரோட்டம் என, நகரமே திருவிழாக்கோலமாக இருக்கும்.
தேரோட்டத்தை தொடர்ந்து, தெப்பத்தேர் வைபவம் நடத்தப்படும். நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில், மிதவை தேர் அமைத்து, பூக்களால் அலங்கரித்து மேள தாளம் முழுங்க மாரியம்மன், விநாயக பெருமான் வீதி உலா வந்து, மிதவை தேரில் எழுந்தருள்வர்.
அதன் பின், மேள, தாள கலைஞர்கள், அந்த தளத்தில் அமர்ந்து இசைக்க, குளத்தில் நான்கு பக்கமும் உள்ள படிக்கட்டுகளில் பக்தர்கள் திரண்டு கயிறு கட்டி இழுக்க தெப்பத்தேர் வைபவம் நடக்கும். ஒன்பது சுற்றுகள் சுற்றுவதை ஊரே கூடி நின்று கொண்டாடும் வைபவம் பிரசித்தி பெற்றது.
துார்வாரப்படாமல் இருந்த தெப்பக்குளத்தை, பொள்ளாச்சி நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் துார்வாரப்பட்டது. அதன்பின், ஊற்று நீரால் குளம் நிரம்பியது. தொடர்ந்து, நகராட்சி வாயிலாக குளத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது.
இந்நிலையில், நடப்பாண்டு திருவிழா நடைபெறும் நிலையில், தெப்பக்குளம் அருகே குவிந்து கிடக்கும் கழிவு மண்ணை அகற்ற வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கூறியதாவது:
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும், 11ம் தேதி துவங்க உள்ளது; வரும், 28ம் தேதி பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பூவோடு எடுத்து வரும் பக்தர்கள், தெப்பக்குளம் அருகே பூவோடுகளை வைத்துச் செல்வர். தற்போது, அந்த இடத்தில், கழிவு மண் குவிந்து கிடப்பதால், இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, நகராட்சி அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கழிவு மண்ணை அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். போதுமான மின்விளக்குகள் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.