/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைபர் கண்ணாடி நிழற்கூரையால் பயனில்லை! ரோட்டோரத்திலேயே காத்திருக்கும் பயணியர்
/
பைபர் கண்ணாடி நிழற்கூரையால் பயனில்லை! ரோட்டோரத்திலேயே காத்திருக்கும் பயணியர்
பைபர் கண்ணாடி நிழற்கூரையால் பயனில்லை! ரோட்டோரத்திலேயே காத்திருக்கும் பயணியர்
பைபர் கண்ணாடி நிழற்கூரையால் பயனில்லை! ரோட்டோரத்திலேயே காத்திருக்கும் பயணியர்
ADDED : பிப் 17, 2025 10:50 PM

வால்பாறை; வால்பாறையில் பைபர் கண்ணாடி நிழற்கூரை அமைக்கப்பட்டாலும், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன்பாக, மக்கள் பயன்பாட்டில் இருந்த பயணியர் நிழற்கூரை, நான்கு ஆண்டுகளுக்கு முன் அலுவலக விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்டது.
இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணியர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், நிழற்கூரை இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.
நகராட்சி அலுவலகத்தின் முன்பாக, பயணியர் நிழற்கூரை கட்ட வேண்டும் என்று, பல்வேறு அமைப்புக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நகராட்சி அலுவலகத்தின் முன், கடந்த ஆண்டு, 9.9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்கூரை கட்டி முடிக்கப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது.
ஆனால், மறைவான இடத்தில் நிழற்கூரை அமைக்கப்பட்டு இருப்பதால் பஸ் வருவது பார்வைக்கு தெரிவதில்லை. மேலும், பைபர் கண்ணாடி நிழற்கூரை என்பதாலும் மக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. மேலும், நிழற்கூரையை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதால், அங்கு நிற்கக்கூட முடியாத நிலை உள்ளது.
மக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக, நகராட்சி அலுவலக நுழைவுவாயில் பகுதியில் இருந்த, பயணியர் நிழற்கூரையை தான் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள பயணியர் நிழற்கூரையை இடித்து சம்பந்தமே இல்லாத இடத்தில் கண்ணாடி மாளிகை போன்று நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், யாருக்கும் பயனில்லை. அதனுள் நின்றால் பஸ் வருவதே தெரியாது. மேலும் வெயில் காலத்தில் உள்ளே நிற்கக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே மக்கள் வரிப்பணம் வீணடிப்பதை நகராட்சி அதிகாரிகள் விட்டுவிட்டு, பழைய இடத்திலேயே புதியதாக பயணியர் நிழற்கூரை கட்ட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்ட போது, ''வால்பாறை நகர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அலுவலக வளாகத்தின் முன்புறம் வெளியூர் செல்லும் பயணியர் நலன் கருதி நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் பைபர் கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உடைய வாய்ப்பு இல்லை, பயணியர் நிழற்கூரையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் விரைவில் அகற்றப்படும்,'' என்றார்.

