/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மையத்தடுப்பில் வேப்பமரக்கன்றுகள் நடவு : அதிகாரிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு
/
மையத்தடுப்பில் வேப்பமரக்கன்றுகள் நடவு : அதிகாரிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு
மையத்தடுப்பில் வேப்பமரக்கன்றுகள் நடவு : அதிகாரிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு
மையத்தடுப்பில் வேப்பமரக்கன்றுகள் நடவு : அதிகாரிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 29, 2025 07:12 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் மையத்தடுப்பில், வேப்ப மரக்கன்றுகள் நடப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாற்று இடத்தில் இந்த மரக்கன்றுகளை நடவு செய்தால் பயனாக இருக்கும், என, எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், போக்குவரத்து வசதிக்காக ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. அவிநாசி - திருப்பூர் - பல்லடம் - பொள்ளாச்சி - கொச்சின் (வழி) மீன்கரை ரோட்டில், காட்டம்பட்டி, நெகமம், புளியம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில் இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி பகுதியில், 600 மீட்டர் சாலை பகுதி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடந்தது.
இதே போன்று, விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது. அதே நேரத்தில் ரோட்டில் இடையூறாக இருந்த மரங்கள் வேரோடு எடுத்து மாற்று இடத்தில் நடவு செய்யப்படுகின்றன. மையத்தடுப்புகளில், அழகுச்செடிகள் நடப்படுகின்றன.
ஆனால், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் புளியம்பட்டி அருகே, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், மையத்தடுப்புகள் அமைத்து அரளி செடி நடப்பட்டுள்ளது. அரளி செடிகளுக்கு இடையிடையே தற்போது வேப்ப மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
குறுகலான மையத்தடுப்புகளில் வேப்பமரக்கன்றுகள் நடவு செய்வதால், மரக்கன்று பெரியதாகி கிளைகள் உருவாகும் போது, உயரமான வாகனங்கள் செல்லும் போது மரக்கிளையில் உரசி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது, என, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ரோடுகள் விரிவாக்கம் செய்த பின், மையத்தடுப்புகளில் அழகு செடிகள், அரளிப்பூச்செடிகள் நடவு செய்வதை பார்த்துள்ளோம்.ஆனால், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் மையத்தடுப்புகளில் வேப்ப மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
வேப்ப மரங்கள் அதிக கிளையுடன் படர்ந்து வளரக்கூடியது. மையத்தடுப்புகள் சேதமடைய வாய்ப்புள்ளது.கிளைகளால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படும்.
மையத்தடுப்பில் வேப்ப மரக்கன்று நடும் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செயல்படுத்தியது புதிராக உள்ளது.தற்போது அடிக்கும் காற்றுக்கே மரக்கன்றுகள் சாய்ந்து வருகின்றன. இதை பணியாளர்கள் சீரமைத்து வருகின்றனர்.
மரங்கள் வளரும் போது கிளைகளை வெட்டி விடலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது போக்குவரத்துக்கு இடையூறாக அமையும்.
மையத்தடுப்புகள் அகலமாக இருந்தால் இதுபோன்று வேப்ப மரக்கன்றுகளை நடலாம். இங்கு குறுகலாக உள்ள சூழலில், பாதிப்பு தான் ஏற்படும்.அதனால், ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பசுமை சாலையாக மாற்றலாம். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பரிசோதனை அடிப்படையில், மையத்தடுப்பில், 10 மீ., இடைவெளியில் வேப்ப மரக்கன்று நடப்பட்டுள்ளது. மரக்கன்று வளர்ச்சி, பாதிப்பு உள்ளதா என அறிய இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.