/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு; திருவிழா கோலாகலம்
/
பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு; திருவிழா கோலாகலம்
ADDED : ஜூலை 02, 2025 08:25 AM

தொண்டாமுத்தூர்; பேரூரில், ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி உற்சவ நாற்று நடவு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு ஆனி நாற்று நடவு திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையடுத்து, தேவேந்திர குல வேளாளர் மடத்தில் நாற்று விடுதல் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் ஸ்ரீ கேதாரீஸ்வரர் திருவீதி உலா நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, மாலை, 4:30 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில்,ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து, தேவேந்திர குல வேளாளர் மடத்தில் இருந்து பொன்னேறு பூட்டி, கோவில் மைதானத்திற்கு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர்.
தொடர்ந்து, சிவாச்சாரியார்கள், பொன்னேறுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்து, மரியாதை செய்தனர்.
அதன்பின், அன்னதானக்கூடத்திற்கு செல்லும் வழியில் உள்ள வயலில், பொன்னேறு பூட்டி உழுதனர். பக்தர்கள், மடத்தில் இருந்து நாற்றுகளை எடுத்து ஊர்வலமாக வயலுக்கு வந்தனர். அங்கு, கோவில் குருக்கள், வயலில் இறங்கி நாற்று நட்டார்.
அதன்பின், மட நிர்வாகிகளும், பக்தர்களும் வயலில் இறங்கி, குலவை சப்தமிட்டு, பட்டீஸ்வரரை வணங்கி, நாற்று நட்டனர். பேரூர் பள்ளுபடல புராணம் வாசிக்கப்பட்டது. அதன்பின், பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர், கோவிலுக்கு சுற்றி ரத வீதிகளில், திருவீதியுலா வந்து அருள் பாலித்தனர்.
தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையுடன் நாற்று நடவு உற்சவ விழா நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டனர்.