/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
/
பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
ADDED : ஏப் 02, 2025 10:25 PM

மேட்டுப்பாளையம்; கல்லார், கோத்தகிரி சாலை சோதனை சாவடியில் ஒருமுறை பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் 19 வகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. மேலும் 1 லிட்டர், 2 லிட்டர் போன்ற சிறிய ரக ஒருமுறை பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள் எடுத்து வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் மற்றும் கோத்தகிரி சாலையில் சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு வரும் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றுக்கு ரூ. 20 அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து சோதனை சாவடி ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவை வாகனங்களில் உள்ளதா என பரிசோதனை செய்து, பறிமுதல் செய்து வருகிறோம். அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
பலமுறை கூறியும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருகின்றனர். அபராதம் விதிப்பதால், அடுத்த முறை அவர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வர மாட்டார்கள், என்றார்.---