/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோதனை சாவடியை மாற்றியதால் செயல்படாத நெகிழி ஒழிப்பு மையம் ; அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
/
சோதனை சாவடியை மாற்றியதால் செயல்படாத நெகிழி ஒழிப்பு மையம் ; அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
சோதனை சாவடியை மாற்றியதால் செயல்படாத நெகிழி ஒழிப்பு மையம் ; அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
சோதனை சாவடியை மாற்றியதால் செயல்படாத நெகிழி ஒழிப்பு மையம் ; அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : ஜூன் 23, 2025 11:21 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சோதனை சாவடி மாற்றியதால் நெகிழி ஒழிப்பு மையம் செயல்படவில்லை.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மற்றும் கோத்தகிரிக்கு செல்ல தனி தனி சாலைகள் உள்ளன. இங்கு வார இறுதி நாட்கள்,விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இவர்கள் சாலையோரங்களில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் கவர்களை வனத்திற்குள் வீசிவிட்டு செல்கின்றனர். இதனை தவறுதலாக வனவிலங்குகள் உண்டால், உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கோத்தகிரி சாலையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை குரங்கள் உட்கொள்கின்றன. அதில் கிடைக்கும் மீதமான உணவுகளை உட்கொள்ள குரங்குகள் அங்கேயே காத்திருக்கின்றன.
கோத்தகிரி சாலையில் வனச்சோதனை சாவடிக்கு அருகே நெகிழி ஒழிப்பு மையம் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. இ--பாஸ் சோதனை சாவடியும் இங்கு செயல்பட்டது. இதனால் ஊழியர்கள் இ--பாஸ் சோதனை செய்வதோடு, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுலா பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த இ--பாஸ் சோதனை சாவடி, அங்கிருந்து கோத்தகிரி செல்லும் வழியில் சுமார் 10 கிலோ மீட்டர் கடந்து குஞ்சபனை அருகே மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் எல்லையில் உள்ள நெகிழி ஒழிப்பு மையம் முற்றிலும் செயல்படாமல் உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குஞ்சபனை வரை உள்ள அடர் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுலா பயணிகள் வீசி செல்வது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதிக்குட்பட்ட சாலையோரங்களில் சிலர் அனுமதியை மீறி சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் கவர்களை வீசி செல்கின்றனர். அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், கோத்தகிரி சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் எல்லை பகுதியிலேயே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். வனவிலங்குகள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, என்றனர்.