சீக்கிரமா துவங்குகங்கப்பா! காத்திருக்கும் போத்தனூர்
சீக்கிரமா துவங்குகங்கப்பா! காத்திருக்கும் போத்தனூர்
UPDATED : ஜூன் 15, 2026 06:31 AM
ADDED : ஜூன் 14, 2026 07:42 PM

கோவை: போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த இதுவரை ரூ.134.77 கோடிக்கு 'டெண்டர்' அறிவிப்பு வெளியாகிய நிலையில் கட்டுமான பணிகளை விரைந்து துவங்க கோரிக்கை எழுந்துள்ளது.
'அம்ரித் பாரத்' திட்டத்தில் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாவது முனையமாக மாற்றும் நடவடிக்கையை தெற்கு ரயில்வே எடுத்துள்ளது. இந்திய ரயில்வேயும் இதற்கு ஒப்புதல் அளிக்க முன்கட்ட பணிகள் நடக்கின்றன. போத்தனுாரில் தற்போது ஐந்து நடைமேடைகள் உள்ளன. இந்த ஸ்டேஷனை நவீன 'கோச்சிங் டெர்மினலாக' மாற்ற, 'டிரிப் மெயின்டனன்ஸ்' மற்றும் நவீன 'அட்வான்ஸ் இன்ஸ்பெக் ஷன்' மையமும் உருவாக்கப்படவுள்ளது.
வேகப்படுத்தணும்! ''கடந்தாண்டு நவ., முதல் ஒவ்வொரு பணியாக பிரித்து 'டெண்டர்' அறிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்., வரை ரூ.101.27 கோடிக்கு 'டெண்டர்' அறிவிக்கப்பட்டது. மேலும், ரூ.33.44 கோடிக்கு 12ம் தேதி டெண்டர் அறிவிக்கப்பட்டது. மொத்தம் ரூ.134.72 கோடி மதிப்பிலான பணிகள் போத்தனுாரில் நடக்கவுள்ளன. ஆனால், 'டெண்டர்' நடைமுறையில் தான் இதுவரை உள்ளது. இதை இறுதிப்படுத்தி கட்டுமான பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்தபோது ஒன்றரை ஆண்டில் பணிகள் முடிக்கப்படும் என்றார். ஆனால், அவர் இங்கு வந்து சென்றே ஆறு மாதங்களாகிறது.
டெண்டர் பணிகளை இறுதி செய்து இப்போது பணிகளை துவங்கினால் வரும் 2028க்குள் இரண்டாவது முனையமாக போத்தனுார் உருவெடுக்கும். கோவையில் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் அதிகம் உள்ளனர்.
கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்போது போத்தனுாரில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடம் அகல ரயில்பாதையாக மாற்றி பல ஆண்டுகளாகியும் அதிக ரயில்கள் தெற்கு பகுதிக்கு இயக்கப்படுவதில்லை.
போத்தனுாரில் 'பிட் லைன்' வந்துவிட்டால் கோவையில் மதுரை, ராமேஸ்வரம், கொல்லம் போன்ற பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழியாக பழையபடி ரயில்கள் இயக்க முடியும்,'' என்கிறார், கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பின் உதவி தலைவர் லட்சுமி நாராயணன்.
துவங்கப்படும்!
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னா லாலிடம் கேட்டபோது,''டெண்டர்' நடைமுறைகள் முடிந்தவுடன் மேம்பாட்டு பணிகள் துவங்கப்படும்,'' என்றார்.
