/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை ரூ.2 உயர்வால் மகிழ்ச்சி
/
இளநீர் பண்ணை விலை ரூ.2 உயர்வால் மகிழ்ச்சி
ADDED : பிப் 16, 2025 10:49 PM
பொள்ளாச்சி,;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 34 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 13,000 ரூபாயாகும்.
தற்போது, அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேநேரம், உற்பத்தி மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால், வரும் நாட்களில், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, விவசாயிகள் சங்கம் நிர்ணயிக்கும் விலைக்கு இளநீரை விற்க அறிவுறுத்தப்படுகிறது. விலை உயர்வு விவசாயிகளிடையே மகிழ்ச்சியளிக்கிறது.
சங்கம் வாயிலாக நிர்ணயிக்கும் தொகை, தோப்புகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வெட்டு கூலி, இதர செலவுகள் வியாபாரியை சார்ந்தது. அதேபோல, எடைக்கு வெட்டும்போது எந்த கழிவும் கொடுக்க வேண்டியதில்லை.
வியாபாரிகள் சிலர், ஒரு இளநீருக்கு வெட்டுக் கூலியாக 4 ரூபாய் குறைத்தும், ஒரு டன் இளநீருக்கு, 50 கிலோ கழிவும் தேவை, என, விவசாயிகளை ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய இளநீர் சந்தையான கர்நாடக மாநிலம் மத்துார் சந்தையில், தற்போது, 40 ரூபாய் வரை, இளநீர் விற்பனையாகிறது. பொள்ளாச்சி இளநீரை ஒப்பிடுகையில், மத்துார் இளநீர் தரத்தில் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, கூறினார்.

