பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: வரும் 20ம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: வரும் 20ம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டம்
ADDED : ஏப் 07, 2026 05:06 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம், 2ம் தேதி துவங்கி, 26ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக மாநிலம் முழுவதும் கல்வி மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்யப்பட்டது.
அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் திருத்தும் மையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து, நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கப்பட்டது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும் (பொ), முகாம் அலுவலருமான மகேஸ்வரி , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் முதுநிலை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
அதன்பின், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கப்பட்டது. முகாம் அலுவலர் முன்னிலையில், அறையிலிருந்து விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. இந்த முகாமில், மொத்தம், 42 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. முதன்மை தேர்வாளர்கள், 60 பேர், கூர்ந்தாய்வாளர்கள், 60 பேர், உதவித்தேர்வாளர்கள், 360 பேர் மற்றும் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், 50 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துல்லியமாகவும், சரியாகவும் திருத்த வேண்டும். மதிப்பெண்கள் விடுபட்டு விடக்கூடாது. பொறுமையாக பார்த்து திருத்த வேண்டும். உதவித்தேர்வாளர்கள் திருத்துவதை, கூர்ந்தாய்வாளர்கள் மற்றும் முதன்மை தேர்வாளர்கள் சரிபார்க்க உள்ளனர். அதன்பின், கணினியில் மதிப்பெண் பதிவு செய்யப்படும். வரும், 20ம் தேதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.
