/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்; வரும் 17ம் தேதி வரை நடக்கிறது
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்; வரும் 17ம் தேதி வரை நடக்கிறது
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்; வரும் 17ம் தேதி வரை நடக்கிறது
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்; வரும் 17ம் தேதி வரை நடக்கிறது
ADDED : ஏப் 04, 2025 11:07 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம், 3ம் தேதி துவங்கி, 25ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக, மாநிலம் முழுவதும் கல்வி மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்யப்பட்டது.
அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விடைத்தாள் திருத்தும் மையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து, நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலரும், முகாம் அலுவலருமான பானுமதி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் முதுநிலை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்கு, முகாம் அலுவலர் முன்னிலையில், அறையிலிருந்து விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. நேற்றுமுன்தினம் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனர். அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்தனர்.
கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது. முகாமில், மொத்தம், 54,696 விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. முதன்மை தேர்வாளர்கள், 60 பேர், கூர்ந்தாய்வாளர்கள், 60 பேர், உதவித்தேர்வாளர்கள், 400 பேர் மற்றும் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், 50 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துல்லியமாகவும், சரியாகவும் திருத்த வேண்டும். மதிப்பெண்கள் விடுபட்டு விடக்கூடாது; பொறுமையாக பார்த்து திருத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உதவித்தேர்வாளர்கள் திருத்துவதை கூர்ந்தாய்வாளர்கள், முதன்மை தேர்வாளர்கள் சரிபார்க்க உள்ளனர். அதன் பின், கணினியில் மதிப்பெண் பதிவு செய்யப்படும். வரும், 17ம் தேதிக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று, பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும், 19ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்வாறு, கூறினர்.
உடுமலை
திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், தாராபுரம் கல்வி மாவட்டத்தில், ஒரு பள்ளியிலும் நேற்று துவங்கியது. இம்மாதம், 17ம் தேதி வரை இப்பணி நடக்கிறது. மே, 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் கூறியதாவது:
தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, விடைக்குறிப்பு தயாரிப்பு, முகாம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முன்னதாக முடிக்கப்பட்டு விட்டது.
பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் அளிப்பது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறை குறித்து கூர்ந்தாய்வாளர், முதன்மை தேர்வர் உள்ளிட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுதும், இரு மையங்களில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியில், 510க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு, கூறினார்.