பிளஸ் 2 கணிதம் கடினமில்லை பள்ளி மாணவர்கள் கருத்து
பிளஸ் 2 கணிதம் கடினமில்லை பள்ளி மாணவர்கள் கருத்து
ADDED : மார் 17, 2026 09:27 PM

பொள்ளாச்சி: பிளஸ் 2 கணித பொதுத்தேர்வு நேற்று நடந்தது. தேர்வு குறித்து பொள்ளாச்சி சுற்றுப்பகுதி மாணவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:
யஷ்வந்த், லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பொள்ளாச்சி: கணித தேர்வு நடுநிலையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் மூன்று வினாக்கள் யோசித்து எழுதும்படி இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. திருப்புதல் தேர்வுகள் அடிக்கடி எழுதியதால் எளிமையாக இருந்தது.
நந்தகிேஷார், விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, ஊஞ்சவேலாம்பட்டி: கணித பாட தேர்வு எதிர்பார்த்ததை விட மிக எளிமையாக இருந்தது. ஓரிரு வினாக்கள் பாடத்தின் உள் பகுதி வினாக்களாக இருந்தாலும், அதுவும் எளிதாய் இருந்தது. முழு மதிப்பெண் பெறும் வகையில் வினாத்தாள் அமைந்து இருந்தது.
தர்ஷன், பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, மகாலிங்கபுரம்: கணித வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாகவும், சிந்தித்து எழுதும்படி இருந்தன. இரண்டு மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக வினா சிந்தித்து எழுதும்படி இருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்தன. திருப்புதல் தேர்வுகள் கை கொடுத்ததால் நல்ல முறையில் தேர்வு எழுத முடிந்தது.
தன்வந்த், கந்தசாமி மெட்ரிக் பள்ளி, கணபதிபாளையம்: கணித தேர்வு மிக எளிமையாக இருந்தது. முந்தைய தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிக அதிகமாக இடம் பெற்று இருந்தன. சில வினாக்கள் புத்தகத்தில் இருப்பது போன்று இல்லாமல், மாற்றி அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு மதிப்பெண் பகுதிகளில் அக வினாக்கள் மிகுதியாக இருந்தன.
