ADDED : பிப் 26, 2026 05:53 AM
கோவை: பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த வழிகாட்டு கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பிளஸ் -2 மாணவர்களுக்கானஅரசு பொதுத்தேர்வு, மார்ச் 2 ம் தேதி துவங்கி 26 -ம் தேதி வரை நடக்கிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு 130 மையங்களில் நடக்கிறது.
365 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 35,712 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அரசு பொதுத்தேர்வுப்பணிகளில், 2,000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். பறக்கும் படையில், 300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு பொது தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான ஆலோசனை கூட்டம் கார்மல் கார்டன் பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார்.
தேர்வின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்கினார். பொதுத்தேர்வில் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகள் தொடர்பாகவும், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணி மேற்கொள்வது குறித்தும் வலியுறுத்தினார்.
இதன் பின் நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அரசுப்பொதுத்தேர்வில் பங்கேற்கும், 2,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
