போத்தனூர் -- தன்பாத் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் துவக்கம்
போத்தனூர் -- தன்பாத் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் துவக்கம்
ADDED : மார் 12, 2026 04:33 AM
போத்தனூர்: போத்தனூரிலிருந்து தன்பாத்திற்கு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
திருச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ரூ.5 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக. போத்தனூர் -- தன்பாத் வரையிலான அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தை காணொலி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில் பூக்களால் அலங்கரித்து முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில், தனது பயணத்தை துவக்கியது. சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், கூடுதல் கோட்ட மேலாளர் சரவணன், எம்.எல்.ஏ. தாமோதரன், கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் வசந்தராஜன், போத்தனூர் ரயில் பயனர்கள் சங்க பொது செயலாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் வழியனுப்பினர். ரயில் மீது பூக்கள் தூவப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பயணியருக்கு கையசைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த ரயிலில் எட்டு ஸ்லீப்பர், 11 இரண்டாம் வகுப்பு மற்றும் பொது என மொத்தம், 22 கோச்கள் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரு கோச்களுக்கு இடையே தானியங்கி கதவு உள்ளது. ரயில் போத்தனூரிலிருந்து புறப்படும் நேரம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
