/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் - தாம்பரம் வாராந்திர ரயில்; பயணிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ரயில்வே
/
போத்தனுார் - தாம்பரம் வாராந்திர ரயில்; பயணிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ரயில்வே
போத்தனுார் - தாம்பரம் வாராந்திர ரயில்; பயணிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ரயில்வே
போத்தனுார் - தாம்பரம் வாராந்திர ரயில்; பயணிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ரயில்வே
ADDED : ஜூலை 04, 2025 10:24 PM

கோவை; பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற, போத்தனுார் - தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு செல்வோருக்காக, கோவை போத்தனுாரில் இருந்து தாம்பரம் வரை, ஏப்., 11 முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மாலை, 5:05க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:45 மணிக்கு போத்தனுார் வந்தது. போத்தனுாரில் இரவு, 11:55க்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 12:15 மணிக்கு தாம்பரம் சென்றடைந்தது. ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்ததால், எப்போதும் நிரம்பி வழிந்தது.
ஜூன், 8 வரை இச்சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதன்பின், நீட்டிக்கப்படவில்லை.
இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் எழுந்துள்ளது.
சென்னை எழும்பூரில் நடைபெறும் பணிகள் காரணமாக, தாம்பரத்தில் ரயிலை பராமரித்து இயக்க ரயில்வேக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ரயிலை கோவை அல்லது செங்கல்பட்டு மற்றும் போத்தனுார் சந்திப்பில் பராமரித்து இயக்க வசதி உள்ளது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமியும் இக்கோரிக்கையை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், 'பயணிகள் ஆதரவு இருப்பதால், தாம்பரம் - போத்தனுார் ரயிலை வாரத்தில் இருமுறை இயக்க வேண்டும். அதேபோல், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக தாம்பரம் - கோவை இடையேயான ரயிலுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும். மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயிலை பழநி வழியாக கோவை வரை நீட்டிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.