/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோஷம் போடாத விநாயகர் சதுர்த்தி போலீசார் அறிவுரை
/
கோஷம் போடாத விநாயகர் சதுர்த்தி போலீசார் அறிவுரை
ADDED : ஆக 19, 2025 09:23 PM

வால்பாறை:
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என, ஆலோசனைக்கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.
வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில், 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், வரும், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, 108 விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், வரும், 31ம் தேதி காலை வால்பாறை நகருக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மாலையில் நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம், வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் பேசும் போது, ''வரும், 27ம் தேதி கோவில்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசர்ஜனம் முடியும் வரை ஹிந்து முன்னணியினர் தான் சிலைகளை பாதுகாக்க வேண்டும்.
கூடுதலாக எந்த ஒரு இடத்திலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது. விசர்ஜன ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி, மாலை, 6:00 மணிக்கு முன்னதாக நடுமலை ஆற்றில் நிறைவு செய்ய வேண்டும்.
ஊர்வலத்தின் போது, பிற மதங்களை புண்படும் படி எந்த கோஷமும் எழுப்பக்கூடாது. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர், வால்பாறை நகர தலைவர் சதீஷ், பொதுச்செயலாளர் லோகநாதன், ஒன்றிய தலைவர் ரவீந்தரகுமார், ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.