/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருட்டு வழக்கில் போலீசார் விரைந்து செயல்பட எதிர்பார்ப்பு:துப்பு துலக்குவதில் மெத்தனம் என மக்கள் புகார்
/
திருட்டு வழக்கில் போலீசார் விரைந்து செயல்பட எதிர்பார்ப்பு:துப்பு துலக்குவதில் மெத்தனம் என மக்கள் புகார்
திருட்டு வழக்கில் போலீசார் விரைந்து செயல்பட எதிர்பார்ப்பு:துப்பு துலக்குவதில் மெத்தனம் என மக்கள் புகார்
திருட்டு வழக்கில் போலீசார் விரைந்து செயல்பட எதிர்பார்ப்பு:துப்பு துலக்குவதில் மெத்தனம் என மக்கள் புகார்
ADDED : பிப் 18, 2024 11:15 PM
பெ.நா.பாளையம்:திருட்டு வழக்குகளில், போலீசார் பொருட்களை மீட்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என, பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குற்ற வழக்குகள், சைபர் கிரைம் மோசடிகள், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை, பிடியானை வழக்குகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள், லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, விபத்து வழக்குகளில் போலீசார் காட்டும் தீவிரம், திருட்டு வழக்குகளில், குறிப்பாக, பகல், இரவு நேரங்களில் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில், குறிப்பிட்ட நபரின் திருட்டுப் போன பொருட்களை மீட்பதில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அக்கறை காட்டுவதில்லை
கோவை நகரில் கடந்த ஆண்டு, 1410 திருட்டு வழக்குகள் பதிவானது. இதில், 621 வழக்குகளில் மட்டுமே துப்பு துலக்கி தீர்வு காணப்பட்டுள்ளது. 789 வழக்குகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதேபோல, கோவை மாவட்ட அளவிலும், திருட்டு வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.பெரிய, பெரிய அளவிலான திருட்டுகளில் போலீசார் காட்டும் அக்கறை, வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டுப் போகும் சம்பவங்களில் அக்கறை காட்டுவதில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து, புறநகரில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்,' திருட்டு சம்பவங்கள் நடந்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குள், பொருட்களை திருட்டு கொடுத்த நபரை போலீசார் படாதபாடு படுத்தி விடுகின்றனர். வீட்டில், 20 பவுன் எடையிலான நகை திருட்டு போயிருந்தால், ஐந்து அல்லது பத்து பவுன் நகை மட்டுமே திருட்டுப் போனதாக கட்டாயப்படுத்தி, எழுதி வாங்குகின்றனர்.
அதற்கும் குறைவாக திருட்டு போயிருந்தால், புகார் பெறுவது இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொண்டுவரும் நபர்களிடம், புகார் கொடுத்து செல்லுங்கள். ஓரிரு நாட்களில் திருடனை பிடித்து விடுவோம். அதற்கு பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நகைகளை மீட்டுத் தருகிறோம் என, சமாதானப்படுத்தி, அனுப்பி விடுகின்றனர். இதனால் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டுக்கள் தொடர்பாக புகாராக வரும் வழக்குகளில், ஏறக்குறைய, 50 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.
தொடர்ந்து சுணக்கம்
தற்போது, 'சிசிடிவி' கேமரா பதிவுகள், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் பதிவான மொபைல் போன்களின் விபரம், பழைய திருட்டு குற்றவாளிகளின் விபரம் ஆகியவற்றை ஒரு சில நிமிடங்களில் போலீசார் பெற்றுக் கொள்ளும் நவீன தொழில்நுட்ப வசதி உள்ளது. இருந்தாலும், திருட்டு சம்பவங்களில், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ந்து போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து வெளியே நடமாடி வருவதால், அவர்கள் மேலும், மேலும் திருட்டு குற்றங்களில் ஈடுபடுவர். போலீசார் இரவு நேர ரோந்துகளை அதிகப்படுத்தி, முக்கிய இடங்களில் அடிக்கடி வாகன தணிக்கை செய்வது, இரவு நேர காவல் பணியில் அதிக போலீசாரை ஈடுபடுத்துவது உள்ளிட்டவைகளால் திருட்டுக்கள் நடப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,' தற்போது, புகாரைப் பொறுத்து புகார் ரசீது மற்றும் முதல் தகவல் அறிக்கை உடனடியாக பதிவு செய்யப்படுகிறது' என்றனர்.

