/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருநாய் தொல்லையை ரகசியமாக விசாரிக்கும் போலீசார்
/
தெருநாய் தொல்லையை ரகசியமாக விசாரிக்கும் போலீசார்
ADDED : பிப் 19, 2025 10:14 PM

பெ.நா.பாளையம்; கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை உள்ளதா என்பது குறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில், 800க்கும் மேற்பட்ட ஆடுகள், தெரு நாய் தாக்கி உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக ஆடுகள் வளர்ப்போர், அரசு உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்த கொள்கை முடிவை எடுத்து, செயல்படுத்த முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்கோவில், காங்கயம், ஊத்துக்குளி, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு, தெரு நாய்கள் தாக்கி, ஆடுகள் கூட்டம், கூட்டமாக பலியாகிவிட்டன. பாதிக்கப்பட்ட ஆடுகள் வளர்ப்போர், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தெரு நாய்கள் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு திருப்பூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் மட்டும் நிகழ்கிறதா அல்லது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இப்பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து கருத்து அறிய, ரகசிய போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
அதன்படி கோவை புறநகர் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை நாய்கள் கடித்து ஆடுகள் இறந்துள்ளனவா, எங்கு, எப்போது அந்த சம்பவங்கள் நடந்தன. அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டதா? மேலும், இது குறித்து ஆடுகள் வளர்ப்பவர்களின் கருத்துக்கள் ஆகியவை குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, அதை அறிக்கையாக தங்களுடைய மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து, ஆடுகள் வளர்ப்போர் கூறுகையில்,'தற்போது கிராமப்புறங்களில் ஆங்காங்கே தெரு நாய்கள், ஆடுகளை கடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தெரு நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு நிவாரணமாக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கான ரூபாயை தொடர்ந்து வழங்கும் நிலை ஏற்படும்.
பிரச்னைக்கு தீர்வு காண, தெரு நாய்களை கட்டுப்படுத்த, அரசு கொள்கை ரீதியான முடிவு எடுப்பதோடு, நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் பெருகும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் முறையை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து உள்ளாட்சி துறையினர் கூறுகையில், 'தமிழக அரசின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்படாமல், எந்த ஒரு தெரு நாயையும் பிடிக்க முடியாத சூழல் உள்ளது.
அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

