தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிரடி சோதனையை துவக்கிய போலீசார்
தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிரடி சோதனையை துவக்கிய போலீசார்
ADDED : ஜன 29, 2026 06:20 AM
கோவை : தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டாமிங் ஆப்ரேஷனை போலீசார் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் வரும், ஏப்., மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது செல்வாக்கை காட்ட முழுவீச்சில் பணிபுரிகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம், வேட்பாளர்கள் தேர்வு மறுபுறம் என பணிகள் நடக்கின்றன.தேர்தலை முன்னிட்டு, இப்போதே பல்வேறு துறையினரும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக போலீசார் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை தற்போது துவங்கியுள்ளனர். கோவை மாநகர போலீசார் ஏற்கனவே தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை துவங்கியுள்ளனர்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கடந்த தேர்தல்களில் பிரச்னைகளை ஏற்படுத்தியவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, பல்வேறு பகுதிகளிலும் ஸ்டாமிங் ஆப்ரேஷனை துவக்கி உள்ளனர். வார இறுதி நாட்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இதில், அனைத்து வித குற்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'தேர்தலின் போது ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தற்போதே நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. லாட்ஜ்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் சோதனை, வாகனத் தணிக்கை, சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
லாட்ஜ்களில் வழக்கமாக யார் வருகின்றனர் என்பது குறித்து அறிந்து கொள்ளப்படுகிறது.
இதுதவிர, குற்றவாளிகள் வருகை குறித்தும் கண்காணிக்க அங்கு சோதனை நடத்தப்படுகிறது. இதன் மூலம் தேர்தல் சமயத்தில் வெளியூர்களில் இருந்து வருவோரை எளிதில் அடையாளம் காண முடியும்,' என்றார்.
