மது விற்றவர்கள் கைது
பொள்ளாச்சி அருகே, திருவள்ளுவர் திடலில், கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள வேல் ேஹாட்டலில், சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட, கோட்டூர் அங்கலகுறிச்சியை சேர்ந்த புரோட்டா மாஸ்டர் மாரிமுத்து,55, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலை சேர்ந்த வேலு,53, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 143 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இரும்பு திருடியவர் கைது
பொள்ளாச்சியை சேர்ந்த கந்தபிரசாத், கட்டட ஒப்பந்த வேலை செய்து வருகிறார். இவர், உடுமலை ரோடு கிருஷ்ணா கார்டன் பகுதியில் கட்டட பணி மேற்கொண்டுள்ளார். அங்கு இருந்த இரும்பு கம்பிகளை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற, பொள்ளாச்சி பொட்டுமேடு பகுதியை சேர்ந்த பாலரகுபதிராஜா,29, என்பவரை பிடித்து, கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாலரகுபதிராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர், பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி
கோவை, போத்தனுாரை சேர்ந்தவர் தயாளன்,42. இவர், சிட்கோ பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் மின்தடை என்பதால், நான்கு நண்பர்களுடன் பொள்ளாச்சி வந்தார். ஆனைமலை ரோட்டில் உள்ள அம்பராம்பாளையம் பகுதியில், ஆழியாறு ஆற்றில் அனைவரும் குளித்தனர். அப்போது, தயாளன் என்பவர், நீர்ச்சுழலில் சிக்கி, நீரில் மூழ்கி தத்தளித்தார். உடன் இருந்த நண்பர்கள் முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நீரில் மூழ்கி இறந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தவறான பதிவு; ஒருவர் கைது
கிணத்துக்கடவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன், 47, பில்டிங் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர், கடந்த 7ம் தேதி, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பசீர்அகமது குறித்து, சமூக வலைதளத்தில் தவறாக பேசி ஆடியோ பதிவு செய்தார்.
இதுகுறித்து, குனியமுத்தூரை சேர்ந்த இந்திய தேசிய லீக் கட்சியின், மாநில அமைப்பு செயலாளர் கிதார் முகமது என்பவர், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, ஜாகீர்உசேன் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.