கஞ்சா பதுக்கியவர்கள் கைது
கோவை மாவட்ட ரூரல் எஸ்.பி., உத்தரவின் பேரில் வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த, நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம், 300 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
போலீஸ் விசாரணையில், வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக், 22, வால்பாறை டோபி காலனியை சேர்ந்த கல்லுாரி மாணவர் வெற்றிவேல், 19, வால்பாறை டோபிகாலனி (கேரளாவில் கார் டிரைவர்) பிரவின், 22, வால்பாறை கல்லார் எஸ்டேட்டை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஸ்ரீராம்பாபா, 21, ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புகையிலை விற்றவர் கைது
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தைச்சேர்ந்தவர் வர்கீஸ்ராஜ், 36, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, வர்கீஸ்ராஜ் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில், விற்பனைக்காக வைத்திருந்த, 53 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.