தனியார் பஸ் மோதி பெண் காயம்
பொள்ளாச்சி அருகே, சமத்துார் சக்தி நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், கோட்டூர்போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சத்யா,35, தனியார் நிறுவன ஊழியர். இவர், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் சமத்துார் பஸ் ஸ்டாப் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அதே ரோட்டில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த தனியார் பஸ், நடுவில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி, தவறான பாதையில் வந்து, இருசக்கர வாகனத்தில் மோதியது. இதையடுத்து, பஸ் டிரைவர் காளியாபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம்,28, நடத்துனர் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த மணிகண்டன்,34, ஆகியோர் தப்பியோடினர்.
விபத்தில் படுகாயமடைந்த சத்யாவை, அப்பகுதி மக்கள் மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து, கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
துாக்கிட்டு தொழிலாளி தற்கொலை
நெகமம் அடுத்த வடசித்துாரைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 23, கூலித்தொழிலாளி. இவர் அவ்வப்போது மது அருந்தி வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனை, வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மது அருந்திய நிலையில், வீட்டிற்கு சென்ற போது, அனைவரும் கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இரவில் சடலம் புதைத்ததால் பரபரப்பு
பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலமநல்லுார் மயானத்துக்கு, நள்ளிரவு நேரத்தில் வாகனத்தில் வந்த சிலர், சடலத்தை புதைத்து சென்றதாக அப்பகுதி மக்கள், போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்காமல் புதைக்கப்பட்ட சடலம் யாருடையது என்பது குறித்து கோட்டூர் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அங்குள்ள தனியார் மில்லிலில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த லட்சுமி சதா என்பவரின் மாமியர் மங்கலிதேவி, 74, இயற்கையான முறையில் இறந்துள்ளார். அவரது சடலத்தை, ஆம்புலன்சில் கொண்டு வந்து, அடக்கம் செய்தது தெரியவந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்காமல் மயானத்தில் யாரும் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.