
நகை திருடியவர்கள் கைது
பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து ஜெயந்தி, 46. இவர், கடந்த நவ., 14ம் தேதி, உறவினர் திருமணத்துக்கு பஸ்சில் பொள்ளாச்சி சென்றார். பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும், கை பையில் இருந்த, 14 சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நெகமம் போலீசில் முத்து ஜெயந்தி புகார் அளித்தார். மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவுப்படி, நெகமம் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.
இதில், ஆனைமலையைச் சேர்ந்த கனகராஜ், 45, மற்றும் ராமலிங்கம், 37, ஆகியோரிடம் விசாரணை செய்ததில் நகை திருடியது தெரியவந்தது. அவர்கள், பொள்ளாச்சி பகுதியிலும் அடிக்கடி திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து, 28.5 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விபத்தில் அர்ச்சகர் பலி
கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதூரைச் சேர்ந்தவர் பரமசிவம், 71. இவர், எஸ்.எம்.பி., நகர் சிவன் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். கடைக்கு செல்ல, பொள்ளாச்சி --- கோவை ரோட்டை கடந்து சென்றார்.
அப்போது, சர்வீஸ் ரோட்டில் வேகமாக வந்த டி.என்.66 ஏஎல் 8658 என்ற எண்ணுள்ள இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த பரமசிவத்தை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
ஆனைமலை - கோட்டூர் ரோடு, அண்ணா நகர் பள்ளி வாசல் அருகே கடந்த மாதம், 10ம் தேதி, பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வாகன தணிக்கையில்ஈடுபட்டனர்.
அப்போது, அங்கலகுறிச்சியை சேர்ந்த கவின்குமார், கோட்டூர் மலையாண்டிபட்டணத்தை சேர்ந்த பிரியாசன் ஆகியோர், இருசக்கர வாகனத்தில் சேகரித்த, 2,350 கிலோ ரேஷன் அரிசியை, சரக்கு வாகனத்தில் ஏற்றி கேரளாவுக்கு கடத்த முயன்ற போது போலீசார், அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், கேரளா மாநிலம் செமணாம்பதியை சேர்ந்த பாட்ஷாவிடம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட் கவின்குமார், தொடர்ந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் என்பதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள கவின்குமாரிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.