விபத்தில் ஒருவர் பலி
கிணத்துக்கடவை சேர்ந்தவர் ராஜு, 52, கூலி தொழிலாளி. இவர், சூலக்கல் பகுதிக்கு வேலைக்கு செல்ல பைக்கில் சென்றார். கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூரில் உள்ள தனியார் பங்க் அருகே சென்ற போது, சுபாஷ் சந்திரன் என்பர் ஓட்டி வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராஜுவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
'கள்' விற்ற மூவர் கைது
நெகமம் சுற்று வட்டாரப் பகுதியில், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியம்,- 61; ஆறுமுகம்,- 48 மற்றும் மன்றாம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி,- 58, ஆகிய மூன்று பேரிடம் இருந்து, தலா, 7 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். விற்பனைக்காக கள் வைத்திருந்ததாக, மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
லாட்டரி விற்றவர் கைது
கிணத்துக்கடவு கோவில்பாளையத்தை சேர்ந்தவர் சக்கரையப்பன், 60, கூலி தொழிலாளி. இவர் கோவில்பாளையம் பள்ளிவாசல் அருகே நின்றிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை சோதனையிட்டனர். இதில், அவர் லாட்டரி விற்பனை செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவரிடம் இருந்து, 12 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.