
விபத்தில் இருவர் உயிரிழப்பு
பொள்ளாச்சி அடுத்த, எஸ்.பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன், 46. இவர், குள்ளக்காபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென, ரோட்டோரத்தில் நின்றிருந்த ராமன் என்பவர் மீது மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் -- கார் மோதல்; இருவர் காயம்
ஆனைமலை தர்மராஜா காலனியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர், தேர்நிலையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன், நேற்று மாலை காரில் சீனிவாசாபுரம் வழியே பொள்ளாச்சி நோக்கி சென்றனர். காரை, பிரபாகரன் ஓட்டினார்.
பாலம் அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த அரசு பஸ் மீது, நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொறுங்கி, அதில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ்சின் கண்ணாடியும் சேதமடைந்தது. அருகில் இருந்தவர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். குடிபோதையில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.