டிரைவர் தற்கொலை
பொள்ளாச்சி அருகே திம்மங்குத்துவைச்சேர்ந்த டிரைவர் ஜெயப்பிரகாஷ்,40. இவர், தனது தாயார் மரகதத்துடன் வசித்து வந்தார். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த அவர், மனம் உடைந்து துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெண்ணை தாக்கியவர் கைது
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி, பட்டணம் கிராமத்தில் கிருஷ்ணசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். மற்றும் இதே பகுதியில் பத்மாவதி,45.என்பவர் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் அடிக்கடி இடத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், பிரச்னை அதிகமாகி வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, கோபம் அடைந்த கிருஷ்ணசாமி, பத்மாவதியை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதில், காயம் அடைந்த பத்மாவதியை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.
தண்ணீர் தொட்டியில்விழுந்த குழந்தை பலி
பொள்ளாச்சி தன்னாசியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்திக் மகன் ஆத்விக்,3. இவர், தனது மகனுடன் மாக்கினாம்பட்டி ஆலமரத்து வீதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் அமர்ந்து கார்த்திக் உறவினருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது, குழந்தை காணவில்லை என தேடினர். அப்போது, குழந்தை வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது தெரிய வந்தது.
உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.