போலீஸ் ஏட் டு க்கு காவல் நீட்டிப்பு
பொள்ளாச்சி அருகே, பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மாக்கினாம்பட்டியை சேர்ந்த செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிய சபரிகிரி,41, என்பவரை கிழக்கு போலீசார் கடந்த, 2ம் தேதி கைது செய்தனர். அவரிடம் இருந்து, 7.5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அவர், நேற்று முன்தினம் ஜே.எம்., 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு, வரும், 29ம் தேதி வரை காவல் நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அவரது ஜாமின் மனு மீதான விசாரணை வரும், 23ம் தேதி வரைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சின்னாம்பாளையத்தை சேர்ந்த சசிகலா, 33, என்பவர் கடந்த மாதம், 27ம் தேதி மாக்கினாம்பட்டி - பாலமநல்லுார் பகுதியில் தனியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த போலீஸ் சபரிகிரி, பெண்ணிடம் நகை பறிக்க முயற்சித்தாக, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பஸ் மோதி ஒருவர் பலி
பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன்,55. இவர், திருமணமாகி ஒரு மாதத்தில் மனைவியை பிரிந்து கடந்த, 35 ஆண்டுகளாக தனியாக வசித்துக்கொண்டு வெல்டிங் வேலை செய்து வந்தார்.இந்நிலையில், பாலக்காடு ரோடு நகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்ற அவர், ரோட்டை கடக்க முயன்ற போது, எதிரே வந்த கேரளா பஸ் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மது விற்ற மூவர் கைது
ஆழியாறு போலீசார், பூவலப்பருத்தி பி.ஏ.பி., கால்வாய் அருகே ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்த போது, புதுக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ்,30, என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவில் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, ஒடையகுளத்தை சேர்ந்த சபரிசங்கர்,31, என்பவரை கைது செய்து, ஆறு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று, என்.எம்., சுங்கம் புளியமரம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த பிரதீப்,25, என்பவரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஆறு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.