2,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, கோவை, உக்கடம் - செல்வபுரம் ரோட்டில் பாலாஜி நகர் அருகே ரோந்து சென்றனர். அப்போது, இரண்டு கார்களில் இருந்து லாரியில், 2,200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டது கண்டறியப்பட்டது. உக்கடம் அண்ணா நகர் அபி என்கிற அபிப் ரகுமான்,47, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், உக்கடம், கோட்டைமேடு, கீரை கார வீதி பகுதி பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அரிசி, லாரி மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.
விவசாயி தற்கொலை
ஆனைமலை அருகே, காரையாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 42. இவர் மனைவியுடன் கடந்த, 16 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்களது மகன், ராசிபுரத்தில் தங்கி படித்து வருகிறார். ராஜேந்திரன் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும், அதிகமாக மது குடித்தும் வந்தார். இதனால், கணவன், மனைவியிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் மது குடித்து வந்த ராஜேந்திரன், நான் இனி குடிக்க மாட்டேன் என மனைவியிடம் கூறியுள்ளார். அதன்பின், வீட்டினுள் துாக்கிட்டு ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாலிபர்கள் மூவர் மீது வழக்கு
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவு பகுதியில், பொதுமக்கள் அதிகமாக நிற்கும் இடத்தில் அரசம்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்,29, சொலவம்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன்,27, மற்றும் சூர்யா,21, ஆகியோர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் புகாரை தொடர்ந்து, அங்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், அவர்கள் மூன்று பேர் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், மக்களை அச்சுறுத்தும் வகையில் தகராறில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாகன விபத்தில் பெண் பலி
நெகமம், கப்பளாங்கரையை சேர்ந்த மாராள், 49, மற்றும் செல்வி, 42, இருவரும் கப்பளாங்கரையில் இருந்து, செட்டிபுதுாருக்கு சென்று திரும்பினர். ரோட்டோரத்தில் நடந்து வந்த போது, செட்டிபுதுாரை சேர்ந்த சதீஸ்குமார், 32, என்பவர் ஓட்டி வந்த பைக், இவர்களை மீது மோதியது.
விபத்தில், இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், சிகிச்சை பலனளிக்காமல் மாராள் இறந்தார். விபத்து குறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.