பைக் திருடியவர் கைது
நெகமம், கக்கடவு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார், விவசாயி. இவரது பைக்கை, கடந்த வாரம் வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின், நெகமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக் திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், போலீசார் நெகமம் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ரமேஷ்குமார் பைக் பிடிபட்டது. விசாரணையில், பைக்கை திருடியது கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 33, என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நீரில் மூழ்கி வாலிபர் பலி
நெகமம், எம்மேகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து, 20, கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் கப்பளாங்கரை பரமசிவன் கோவில் அருகே உள்ள குட்டையில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இவரது ஆடைகள் நீர் நிலையின் அருகாமையில் இருந்ததை கண்ட சிலர் சந்தேகம் அடைந்து, நீர் நிலையில் அவரை தேடினார்கள். அப்போது வீரமுத்து சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.