மின்மோட்டார் திருடியவர் கைது
பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில், மழைநீர் தேக்கமடைந்தால் அதனை அகற்ற, மின் மோட்டார் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி, ரயில்வே பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, மின் மோட்டார் திருடு போயிருப்பதை அறிந்தனர். இதையடுத்து, பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட சீனியர் இன்ஜினியர் ((மின்சாரம்) கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கிளாரிவல்சா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இவர்கள், கடந்த இரு வாரங்களாக, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, மீனாட்சிபுரம் பகுதியில், சந்தேகத்தின் பேரில் சுற்றி வந்த நபரிடம் விசாரித்தனர். அதில், அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த ராஜவேலு,40 என்பதும் மோட்டார் திருடியதும் உறுதியானது.
அவர் மீது ஏற்கனவே கோட்டூர், வடக்கிபாளையம், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார், அவரை, கோவை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விபத்துகளில் 2 பெண்கள் காயம்
கே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா தேவி, 40. இவர் தனது பைக்கில் நெகமம் அருகே உள்ள சின்னேரிபாளையம் பகுதியில் செல்லும் போது, பொள்ளாச்சியில் இருந்து நெகமம் நோக்கி வந்த லாரி, வளைவுப் பகுதியில் திரும்பும் போது பைக் மீது மோதி விபத்து நடந்தது. இதைக்கண்ட லாரி டிரைவர் தப்பி ஓடினார்.
அருகில் இருந்தவர்கள், விபத்தில் காயமடைந்த பெண்ணை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
* கேரளா, ஒழல்பதியைச்சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 45. இவர் வடசித்தூர் நோக்கி பைக்கில் செல்லும்போது, இவரின் எதிரே திருநெல்வேலியை சேர்ந்த கார்த்தி, 27, என்பவர் ஓட்டி வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது.
இதில் காயமடைந்த உமா மகேஸ்வரியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.