தேங்காய் திருடிய இருவர் கைது
பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டியில், அண்ணாதுரை என்பவரின் தோட்டத்தில், 500 தேங்காய்கள் திருட்டு போனதாக நேற்றுமுன்தினம் கோமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை செய்ததில், நல்லாம்பள்ளியை சேர்ந்த ஐயப்பன்,37, மாசாணி,40 ஆகியோரை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 500 தேங்காய், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
6 கிலோ கஞ்சா பறிமுதல்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கோட்டூர் பகுதியை சேர்ந்த சபரிநாதன்,28, என்பதும், புவனேஸ்வரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, உள்ளூரில் விற்பனை செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஆறு கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கார் மோதி இளைஞர் பலி
பொள்ளாச்சி மின்நகரை சேர்ந்தவர் அரவிந்தன், 26, தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பாளையம் பகுதியில் ரோட்டைக் கடந்த போது, அவ்வழியே தொப்பம்பட்டியை சேர்ந்த அருண், 29, ஓட்டி வந்த கார் மோதியது. விபத்தில் காயமடைந்த அரவிந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.