/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் நவீன சிக்னல்கள் அமைக்க போலீசார் திட்டம்
/
மாநகரில் நவீன சிக்னல்கள் அமைக்க போலீசார் திட்டம்
ADDED : ஜூன் 14, 2025 11:31 PM
கோவை: கோவை மாநகர பகுதியில் தற்போது உள்ள சிக்னல்களுக்கு பதிலாக, நவீன சிக்னல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்ய அமைக்கப்பட்ட பெரும்பாலான சிக்னல்கள் நீக்கப்பட்டு, 'யூ டர்ன்', ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன.
எனினும், அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சிக்னல்கள் செயல்பட்டு வருகின்றன. பாதசாரிகள் சாலையை கடக்க, 'பெலிக்கன் சிக்னல்' அமைக்கப்பட்டுள்ளது.
மாநகரில் உள்ள சிக்னல்களை தனியார் நிறுவனத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், பழைய சிக்னல்களுக்கு பதிலாக நவீன (மார்டர்ன்) சிக்னல்களை அமைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதாவது, சிக்னல் கம்பத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக, எல்.இ.டி., போன்று, சிக்னல் கம்பங்கள் முழுவதும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்கள் ஒளிரும் வகையில், புதிய சிக்னல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''மாநகரில் உள்ள பழைய சிக்னல்களை அப்புறப்படுத்திவிட்டு நவீன சிக்னல்கள் அமைக்க, சிக்னல்களை பராமரித்து வரும் நிறுவனத்திடம் பேசியுள்ளோம். முதற்கட்டமாக அண்ணாதுறை சிலை, திருச்சி ரோடு, சத்தி ரோடு ஆகிய இடங்களில் சுமார் எட்டு சிக்னல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.