/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் அறைகளில் போலீசார் திடீர் சோதனை
/
மாணவர்கள் அறைகளில் போலீசார் திடீர் சோதனை
ADDED : நவ 03, 2024 10:46 PM

கோவை; தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லாத கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் அறைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் தங்கி இருந்த விடுதிகள் மற்றும் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. அதேபோல சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் தீவிரமாக கண்காணித்து போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து வந்தாலும், புதிது புதிதாக போதைப் பொருள்களை விற்பனை செய்யும் நபர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில், வெளியூரிலிருந்து கோவைக்கு வந்து விடுதி மற்றும் வீடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளி பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
ஆனால், ஒரு சிலர் விடுமுறைக்கு ஊருக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளனர். அவர்கள் எதற்காக ஊருக்கு செல்லாமல் அறையில் தங்கி உள்ளனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை போலீசார் அதிரடியாக உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்துார் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் தங்கி இருந்த அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து தீவிர சோதனை நடத்தினர்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடிக்குமாடி குடியிருப்புகளில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல குனியமுத்துார், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அறைகளில் தங்கி இருந்தவர்களிடம், தீபாவளி விடுமுறைக்கு ஏன் ஊருக்கு செல்லவில்லை என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சோதனையில் போதை பொருள்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை. 29 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. இது சம்பந்தமாக விசாரித்து வருகிறோம்,” என்றார்.