/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் அறைகளில் போலீசார் திடீர் சோதனை
/
மாணவர்கள் அறைகளில் போலீசார் திடீர் சோதனை
ADDED : நவ 04, 2024 03:46 AM

கோவை: கோவையில், சில நாட்களுக்கு முன், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் தங்கி இருந்த விடுதிகள் மற்றும் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், வெளியூரிலிருந்து கோவை வந்து விடுதி மற்றும் வீடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் விடுமுறைக்கு ஊருக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளனர்.
அவர்கள் எதற்காக ஊருக்கு செல்லாமல் தங்கி உள்ளனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்துார் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் தங்கி இருந்த அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சோதனையில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை. 29 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்து வருகிறோம்' என்றார்.