ADDED : அக் 30, 2024 11:43 PM

மேட்டுப்பாளையம் ; பயணிகள் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ரயில் பயணத்தின் போது பட்டாசுகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பட்டாசு எடுத்துச் செல்கின்றனரா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில், ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளிடம் மற்றும் ரயிலில் உள்ள பெட்டிகளில் போலீசார் ஏறி, பயணிகளின் உடைமையை சோதனையிட்டனர். அப்போது பயணிகளிடம் ரயில் பயணத்தின் போது பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது என்றும் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். மேலும் ரயிலில் பயணம் செய்யும் போது, பெண்கள் அதிக அளவில் நகைகளை அணிந்து செல்லக்கூடாது என்றும் இரவு நேரத்தில் ஜன்னல் ஓரமாக படுத்து தூங்க கூடாது என்றும் அறிவுறுத்தினர்.--
