/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு போலீஸ் காவல்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
/
கார் குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு போலீஸ் காவல்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
கார் குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு போலீஸ் காவல்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
கார் குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு போலீஸ் காவல்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
ADDED : நவ 12, 2024 09:19 AM

கோவை: கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022ம் ஆண்டு அக்., 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக், முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன், மற்றொரு முகமது அசாருதீன், தாஹா நசீர் உள்ளிட்ட 8பேரையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.
கார் குண்டு வெடிப்பு வழக்கில் மொத்தம், 14 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட, 14 பேர் மீது சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நான்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி போத்தனுாரைச் சேர்ந்த அரபிக் கல்லுாரி ஆசிரியர் அபு ஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன் மற்றும் உக்கடம் ஜி.எம்., நகரைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி பவாஸ் ரஹ்மான் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும், ஒருவரிடம் இருந்து கமிஷன் தொகைக்காக நிதி திரட்டி தந்ததும், ஐ.எஸ்.ஐ.எஸ்., சித்தாந்தத்தில் தீவிரமாக இருந்ததும், அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன் ஐ.எஸ்., இயக்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த அபு அல்ஹசன் அல்ஹாஸ்மிக்கு வாக்குறுதி கொடுத்து தாக்குதல் நடத்துவதாக உறுதியேற்று இருந்ததும் தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. அவர்களை பலத்த பாதுகாப்புடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சென்னை அழைத்து சென்றனர்.
தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லியில் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் எடுக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி அவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணைக்காக 3 பேரையும் நேற்று கோவை அழைத்து வந்தனர்.
அவர்களை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ., முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.