ADDED : செப் 04, 2025 11:21 PM
கோவை; காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில், காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது.
இதன் பின்புறத்தில், சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஏழு தளங்களுடன் நுாலகம் கட்டப்படுகிறது. அதற்கான நுழைவாயில் கட்ட இருப்பதால், போலீஸ் ஸ்டேஷனை காலி செய்ய பொதுப்பணித்துறை கோரிக்கை விடுத்தது. அதனால், காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் செயல்படும் சட்டம்- - ஒழுங்கு, குற்றப்பிரிவு, உதவி கமிஷனர் அலுவலகம் ஆகியவை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு நேற்று மாற்றப்பட்டது.
காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்துக்கும், போக்குவரத்து பிரிவு, கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு, ஊர்க்காவல் படை அலுவலகம், ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளிக்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டன.
தமிழ்நாடு ஹோட்டல் அருகே சிறைத்துறைக்கு சொந்தமான 75 சென்ட் இடத்தில் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டியதும், தற்போது இட மாற்றம் செய்துள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அனைத்து பிரிவுகளும் புது கட்டடத்துக்கு மீண்டும் வந்து விடும் என போலீசார் தெரிவித்தனர்.