/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிசாலை பணி 95 சதவீதம் நிறைவு! மழை பெய்யாவிட்டால் டிச.,ல் நிறைவு செய்ய திட்டம்
/
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிசாலை பணி 95 சதவீதம் நிறைவு! மழை பெய்யாவிட்டால் டிச.,ல் நிறைவு செய்ய திட்டம்
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிசாலை பணி 95 சதவீதம் நிறைவு! மழை பெய்யாவிட்டால் டிச.,ல் நிறைவு செய்ய திட்டம்
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிசாலை பணி 95 சதவீதம் நிறைவு! மழை பெய்யாவிட்டால் டிச.,ல் நிறைவு செய்ய திட்டம்
ADDED : அக் 03, 2025 09:20 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள், 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. மழை பெய்யாவிட்டால், டிச. மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி -- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டப்பணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி -- மடத்துக்குளம் இடையே 50.07 கி.மீ., மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் - கமலாபுரம், 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., துாரத்துக்கு ரோடு அமைக்கப்படுகிறது.
அதில், 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டது.
இழப்பீடு வழங்கப்பட்ட பின், நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பகுதியில், தென்னை மரங்களை வெட்டி அகற்றுதல் மற்றும் கட்டடம் இடிக்கும் பணிகளுடன், மேம்பால பணிகளிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகே, 2,166 மீட்டருக்கு தென்னை மரங்கள், கட்டடங்கள் அகற்றப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டு, சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஆச்சிப்பட்டி - புளியம்பட்டி செல்லும் ரோட்டில் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. மேலும், ஆங்காங்கே ரோடு பணிகளும் முழுமை பெறாமல் உள்ளன.
விரைவில் முடிக்கணும்! சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடைபெறும் பணிகள் மந்தமாக நடக்கின்றன. இப்பணிகளை விரைவுப்படுத்தி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இப்பணிகள் முடிந்து, ரோடு பயன்பாட்டுக்கு வந்தால் பயண துாரம், பயண நேரம் குறையும்.
பழநியில் இருந்து கோவை, கோவையில் இருந்து பழநி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோரும், பொள்ளாச்சி நகருக்குள் வராமல், 'பைபாஸ்' ரோட்டை பயன்படுத்திச் செல்வர். இதனால், பொள்ளாச்சி நகரப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எனவே, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
பணிகளுக்கு இலக்கு
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நான்கு வழிச்சாலை பணிகள், 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. புளியம்பட்டி பாலம், ஊஞ்சவேலாம்பட்டி உள்ளிட்ட நான்கு பாலங்களில், இருபக்கம் சுவர்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழை பெய்யாவிட்டால், டிச. மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழை பெய்தால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். இதற்காக பணிகள் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.