/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி-மடத்துக்குளம் வரையிலான ரோடு விரைவில் மாற்றம்! மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பு
/
பொள்ளாச்சி-மடத்துக்குளம் வரையிலான ரோடு விரைவில் மாற்றம்! மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பு
பொள்ளாச்சி-மடத்துக்குளம் வரையிலான ரோடு விரைவில் மாற்றம்! மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பு
பொள்ளாச்சி-மடத்துக்குளம் வரையிலான ரோடு விரைவில் மாற்றம்! மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பு
ADDED : ஆக 20, 2025 09:32 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - மடத்துக்குளம் வரையிலான ரோடு, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் விரைவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்படைக்க உள்ளது. இந்த ரோட்டில் பராமரிப்பு பணிகளுக்காக, 50 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், ஆச்சிபட்டி முதல் பொள்ளாச்சி வரையிலும் நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின், உடுமலை ரோட்டில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை போக்குவரத்து வசதிக்காக கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், 24 கோடியே, 77 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் செலவில் ரோடு, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
விபத்துகளை தவிர்க்க, உடுமலை ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டாலும், விபத்து பகுதியாக மாறியுள்ளது.நடைபாதை ஆக்கிரமிப்பு, குறுகலான சர்வீஸ் ரோடு என பல பிரச்னைகளால் அவ்வழியாக பயணிக்கும் மக்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், இந்த ரோட்டில் உள்ள மையத்தடுப்புகளில் இருந்த கம்பிகள் பெயர்ந்து விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடு மிகமோசமாக உள்ளன. ரோட்டின் இருபுறமும், மையத்தடுப்புகளிலும் புதர்கள் வளர்ந்துள்ளது.
இந்த ரோட்டில், குழியை மூட பெயரளவில் 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டது. அதன்பின், முதல்வர் வருகைக்காக ரோடு சீரமைக்கப்பட்டது. முழு அளவில் ரோட்டை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், இந்த ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி -- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி -- மடத்துக்குளம், 50.07 கி.மீ., மடத்துக்குளம் --- ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் -- கமலாபுரம், 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., துாரத்துக்கு ரோடு அமைக்கப்படுகிறது.
இந்த ரோடு பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதால், இது தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரோட்டை, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி வரை உள்ள பழைய ரோடுகளை, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளுக்காக, மொத்தம், 50 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக அனுமதி கிடைத்ததும், உரிய வங்கி கணக்கிற்கு அந்த நிதி அனுப்பப்படும். விரைவில் இந்த ரோடு மாநில நெடுஞ்சாலையிடம் ஒப்படைத்து, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.

