ADDED : ஏப் 22, 2026 11:25 PM

கோவை:இன்று நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலை சிறப்பாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அந்தவகையில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும், வாக்காளர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பசுமை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடி முழுவதும் தென்னை ஓலைகளால் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை தவிர்த்து வாழை மரங்கள், வாழைக்குலை, தென்னங்கீற்று தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் மண் பானை, டம்ளர் மற்றும் மறுசுழற்சி பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட மேசைகள், காகிதம் மற்றும் மூங்கில் பேனாக்கள் என சூற்றுச்சூழல் நட்பு பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.
பசுமை தோழி வாசுகி கூறுகையில், '' ஒரு சட்டசபை தொகுதிக்கு குறைந்தது ஒரு பசுமை ஓட்டுச்சாவடி அமைக்க கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி, மாவட்டம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட பசுமை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே பசுமை ஓட்டுச்சாவடிகளின் நோக்கம், '' என்றார்.
