/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
/
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 18, 2025 03:23 AM
அன்னுார்: மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், குரும்பபாளையத்தில், 30 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் பல்வேறு இடங்களில் இருந்து லோடு கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது.
'இந்த குப்பையால் குளத்தில் உள்ள நீர் மாசுபடும். மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கி உள்ளதால் குளத்தில் சேரும் நீர் எதற்கும் பயன்படாது.
சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்,' என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது.
இதையடுத்து நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குளத்தில் ஆய்வு செய்தனர். மருத்துவ கழிவுகள் உள்ளதா என பரிசோதித்தனர். ஊராட்சி அலுவலர்களிடம் விசாரித்தனர்.
இதையடுத்து அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் குளத்தில் ஆய்வு செய்தனர். ஊராட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'குளத்தில் மக்கும் குப்பைகள் மட்டுமே உள்ளன. மருத்துவ கழிவுகள் இல்லை,' என்றனர்.
எனினும் பொன்னே கவுண்டன் புதூர் மக்கள் கூறுகையில்,' மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் அங்கு கிடக்கின்றன.
கழிவுகளை சாப்பிட்டு ஒரு நாய் இறந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் குளத்தில் கழிவுகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

