/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 12, 2024 11:10 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், பொங்கல் விழா பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ பொங்கலாக கொண்டாடினர்.
மாணவ, மாணவியருக்கு, கயிறு இழுத்தல், உறியடி, கோலம் மற்றும் மெஹந்தி போட்டிகள் நடைபெற்றன. ஆசிரியர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை நடராஜ், கவிஞர் முருகானந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி பட்டதாரி ஆசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.
*கோடங்கிப்பட்டி தொடக்கப்பள்ளியில், மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து, பொங்கலோ பொங்கல் என குலவை சத்தத்துடன், பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மாணவியரின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியர் சந்தியா செய்திருந்தனர்.
* பொள்ளாச்சி வடக்கு ஒருங்கிணைந்த கல்வி சார்பில், உள்ளடங்கிய கல்வி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மைய பொங்கல் விழாவில், கல்வி மாவட்ட அலுவலர் கேசவகுமார் தலைமை வகித்தார். மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் ஸ்வப்னா, ஆசிரியர் பயிற்றுநர்கள், மைய பொறுப்பாளர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்.
* எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவு யுவகுரு கல்லுாரியில், பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. கிரிக்கெட், கேரம், செஸ், ரங்கோலி, உறியடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
* பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பொங்கல் வைத்தும், பாரம்பரிய கலைகளை ஆடியும் கல்லுாரி மாணவர்கள் மகிழ்ந்தனர்.
* கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் பிரகாஷ் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன் பேசினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து, சமத்துவ பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர்.
ஆனைமலை
ஆனைமலை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் உள்ளடங்கிய கல்வி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னாட், வட்டார கல்வி பணியாளர்கள், உள்ளடங்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி, சிறப்பு பயிற்றுநர்கள், மைய ஆசிரியர் அமுதா, உதவியாளர் சரண்யா, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
* கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் மனோன்மணி அரசு பெண்கள் மேல்நிலப்பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், தலைமையாசிரியர் சிவப்பிரியா, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்லமுத்து, துணை தலைவர் தர்மு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவியருக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி முதுகலை ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடந்தது. பள்ளி ஆசிரியர்களுக்கு, மியூசிக் சேர், உறியடி, லெமன் அண்ட் ஸ்பூன் மற்றும் பலுான் உடைத்தல் போன்ற போட்டிகள் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு, கோலப்போட்டி மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். கல்லுாரி மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்தனர். மாணவர்கள் நடனமாடி அசத்தினர். பாடப்பிரிவு வாரியாக மாணவர்கள் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். * வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை
இன்று முதல் பொங்கல் விடுமுறை துவங்குவதையொட்டி, உடுமலை பள்ளி, கல்லுாரிகளில் நேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்தனர். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.
மாணவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, உறிஅடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
* உடுமலை சுற்றுப்பகுதி அங்கன்வாடி மையங்களிலும், குழந்தைகளின் பெற்றோரை அழைத்து பொங்கல் வைத்து கொண்டாடினர். குழந்தைகள வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா தலைமை வகித்தார். அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.
* ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார்.
கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா, முதல்வர் லட்சுமி, பேரவைத் தலைவர் அறம் முன்னிலை வகித்தனர். மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவியர் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து வள்ளிக் கும்மி, தேவராட்டம், உறியடி, சலகெருது ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தன.