/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் கோலாகலம்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் கோலாகலம்
ADDED : ஜன 15, 2024 12:04 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகள், அரசு அலுவலகங்ககளில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி செயலர் விஜயமோகன் தலைமை வகித்தார். முதல்வர் சோமு முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தேவராட்டம், கும்மியாட்டம், உறியடித்தல், மயிலாட்டம், கிராமிய நடனம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடி மாணவர்கள் அசத்தினர். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* சேத்துமடை அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஐரின் ஸ்டெல்லா தலைமை வகித்தார். உதவியாசிரியர்கள் சிவானந்தம், சுகந்தி ஆகியோர் விழாவை நடத்தினர். மாணவ, மாணவியருக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் மாசிலாமணி நன்றி கூறினார்.
* பொள்ளாச்சி, ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் அரசு பெரியசாமி பேசினார்.
தாளாளர் சுப்ரமணியம், பொங்கல் நாளில் நாம் உயிர்வாழ காரணமாக உழவுத்தொழிலையும், உழவர்களையும், இயற்கையையும் வணங்க வேண்டும். இன்றைய சூழலில் மாணவர்கள் உழவு தொழிலின் தனித்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், உரியடித்தல், கம்பு சுழற்றுதல், கயிறு இழுத்தல், பல்லாங்குழி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து, குதிரை சவாரி, மாட்டு வண்டி பயணம் நடைபெற்றன. செயலாளர் தமிழ்செல்வன், பள்ளி நிர்வாகிகள் தங்கமணி, மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி தலைமை வகித்தார். துாய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. செயல் அலுவலர் கணேசன், துணை தலைவர் சையது அபுதாஹிர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பொங்கல் விழாவில், டாக்டர்கள், செவிலியர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் வந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து, பாட்டிலில் நீர் நிரப்புதல், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
உடுமலை
உடுமலை, ஆர்.கே.ஆர்.,கிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் வைத்து கொண்டாடினர். பாரம்பரியம், பண்பாட்டை உணர்த்தும் வகையில், பவளக்கொடி குழுவினரின் கும்மியாட்டம், மாணவர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.
பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். கோவை கே.பி.ஆர்.,கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி பங்கேற்று பேசினார். சினிமா பின்னணி பாடகர் வேல்முருகனின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி செயலாளர் கார்த்திக்குமார், முதல்வர் மாலா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
* கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துவக்கமாக, ஆசிரியர்கள், மாணவர்கள் சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.
தொடர்ந்து கும்மி, தேவராட்டம், உறியடித்தல், நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சிகளும் நடந்தன.
மழலையர் பிரிவு குழந்தைகள் மாட்டு வண்டிகளில் பள்ளியை வலம் வந்தனர். பொங்கல் விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.